கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - பொதுமக்கள் அதிர்ச்சி
ராமேஸ்வரத்தில் கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே அங்குள்ள மீனவ பெண்கள் அப்பகுதியில் கிடைக்கும் கடல் பாசியை சேகரித்து அதை விற்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற 45 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் கடல்பாசியை சேகரிக்க சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வட மாநிலத்தவர்கள் சந்திராவை கேலி செய்தாக கூறப்படுகிறது. அத்துடன் இறால் பண்ணை அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் கொலையை மறைக்கும் நோக்கில் உடலை தீவைத்து எரிந்துள்ளனர். வெகுநேரமாகியும் சந்திரா வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் 6 வடமாநிலத்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
ஆனால் கடும் ஆத்திரத்தில் இருந்த மக்கள் கைது செய்யப்பட்ட ஆறு போரையும் சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதை தொடர்ந்து அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயிரிழந்த சந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.