திருச்சி அருகே சாலையில் தேங்கிய கழிவுநீர்: பொதுமக்கள் அவதி
திருச்சி அருகே சாலையில் தேங்கிய கழிவுநீரால் அங்குள்ள கைப்பிடி சுவரை பிடித்து சர்க்கஸ் போல் சாகசம் செய்து பொதுமக்கள் சாலையை கடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் மேம்பாலம் அருகே பிரதான சாலையில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் ஓடைக்கான பால பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகமானோர் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வந்தனர்.இதனால் அப்பகுதியின் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் சுப்பையா பள்ளியில் சாக்கடை கழிவு நீர் உள்ளே புகுந்து விட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
சாலை முழுவதும் கழிவு நீர் நிரம்பி வழிந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதால் மாநகராட்சி உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.