ரயிலில் தனியாக கழன்று ஓடிய 3 பெட்டிகள் - அலறிய பயணிகள்!
சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேது எக்ஸ்பிரஸ்
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு இரவு புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 1.20 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்து, 1.40 மணிக்கு சென்னைக்குப் புறப்பட்டது.
நடைமேடையிலிருந்து சுமார் 100 மீட்டர் சென்ற நிலையில், ரயிலின் கடைசியில் இருந்த எஸ்-1 பெட்டி, பொதுப்பெட்டி மற்றும் மகளிர் பெட்டி என 3 பெட்டிகள் தனியாகக் கழன்றன. உடனே, அந்த 3 பெட்டிகளிலும் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து, கூச்சலிட்டனர்.
பயணிகள் அதிர்ச்சி
இதனையறிந்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதற்கிடையில், கழன்ற பெட்டிகள் சிறிது தூரம் ஓடி நின்றன. இதனையடுத்து தகவலறிந்து வந்த ரயில்வே பொறியாளர்கள், ஊழியர்கள் உடனடியாக ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக, அதிகாலை 2.30 மணியளவில் ரயில் புறப்பட்டுச் சென்றது. தற்போது இதுகுறித்து ரயில்வே நிர்வாகம், ரயிலில் இருந்து பெட்டிகள் கழன்றது குறித்து சென்னை பராமரிப்பு பணிமனையில் விசாரணை நடத்தப்படும்.
இது தொடர்பாக இங்கிருந்து ஒரு அறிக்கை அனுப்பப்படும். இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.