வைக்கோல் காட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் - தேர்வு எழுத வைத்து பிடித்த டிஎஸ்பி!
வைக்கோல் காட்டுக்கு தீ வைத்தவர்களை தேர்வு எழுதிவைத்து போலீசார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.
காட்டுக்கு தீ
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பந்தநல்லூர், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. கடந்த 16-ம் தேதி இவருக்கு சொந்தமான வைக்கோல் காட்டுக்குள் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
மேலும் அவரின் வீட்டுச் சுவரில் 'தெடரும்' என பிழையாக எழுதி, பின்னர் அதனை திருத்தி 'தொடரும்' என மாற்றி எழுதி வைத்துள்ளனர். இது தொடர்பாக கலியமூர்த்தி பந்தநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்துள்ளனர். மேலும், திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக நூதன முறையைக் கையாண்டார்.
குற்றவாளிகள் கைது
பின்னர் பிடிபட்ட இளைஞர்களுக்கு 'தொடரும்' என முடியும் வாக்கியங்களாக கேள்வியாக தயாரித்து தேர்வு எழுத வைத்தார். அதில், ஜெயபிரகாஷ் என்பவர் சுவரில் எழுதப்பட்டிருப்பதை போன்று தெடரும் என பிழையாக எழுதியுள்ளார்.
அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் வைக்கோல் காட்டுக்கு அவர்தான் தீ வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும், தனது விளம்பரத்திற்காகவும், தங்களை பற்றி ஊரில் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காகவும் தீ வைத்து சென்றதாகவும் ஜெயபிரகாஷ் கூறியுள்ளார். இதனையடுத்து ஜெயபிரகாஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர் பிரகாஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.