தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியரக்ளுக்கு வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு வாக்களிக்க போதுமான அவகாசம் அளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு தரப்பு கட்சியினர் மிகவும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்கு வாக்களிக்க கூடுதல் கால அவகாசம் கேட்டு வழக்கு தொடரப்பட்டது. அதன்படி சொந்தத் தொகுதிக்கு வெளியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மின்னணு மூலம் வாக்களிக்க அனுமதி வழங்க இயலாது எனவும், தபால் மூலம் அவர்கள் வாக்களிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, போதுமான ஊதியம் இல்லாமல் துணிச்சலாகத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜனநாயகம் வழங்கியுள்ள முக்கியமான அடிப்படை உரிமையான வாக்குரிமையை மறுக்கக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், அவர்கள் தபால் மூலம் வாக்களிக்கப் போதிய கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும், வாக்களிக்கத் தவறியவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதையும் உறுதி செய்யத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.