தலைக்கேறிய கஞ்சா போதை; அப்பா, அக்காவை கொலை செய்த நடிகையின் மகன்..!
சீரியல் நடிகை சாந்தியின் மகன் கஞ்சா போதையில் இருந்த போது தனது தந்தை மற்றும் அக்காவை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல் நடிகை சாந்தி குடும்பம்
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு ராகவேந்திரா தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் இசைப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவரது மனைவி சாந்தி சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார். ராஜா ராணி சீரியல் தொடரிலும் சாந்தி நடித்து உள்ளார்.
இந்த தம்பதிக்கு பிரியா, என்ற மகளும் ராஜேஷ் பிராங்கோ, பிரகாஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர். பிரியா மற்றும் ராஜேஷ் பிராங்கோவுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கடைசி மகன் பிரகாஷ் மட்டும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணி புரிந்து வருகிறார்.
மகள் பிரியா தனது பெற்றோர்களின் வீட்டின் அருகிலேயே கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
அக்கா, அப்பாவை கொலை செய்த கொடூரம்
இந்த நிலையில் சனிக்கிழமை தனது அக்காவான பிரியா வீட்டிற்கு சென்ற பிரகாஷ் ,பிரியாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பிரகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கத்தியால் பிரியாவின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கி விழுந்த பிரியா உயிரிழந்தார். இதனை கண்டு அவரது வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து சத்தம் போட்டதையடுத்து பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த தாய் சாந்தி மற்றும் அவனது அண்ணன் ராஜேஷ் பிராங்கோ கதறி அழுதனர். இந்த நிலையில் தனது அப்பாவை காணவில்லை என்று ராஜேஷ் மற்றும் அவரது மனைவி சாந்தி தேடிய போது வீட்டின் படுக்கையறையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தலைக்கேறிய கஞ்சா போதையால் கொலை
சம்பவம் பற்றி குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்த தந்தையை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு அதே கத்தியால் பிரகாஷ் அக்காவை கொலை செய்து இருப்பதும் தெரிந்துள்ளது.
இதையடுத்து அதே பகுதில் சுற்றி திரிந்த பிரகாஷை போலீசார் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்த பிரகாஷ் கஞ்சா மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்.
அண்மைகாலமாக பிரகாஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.
மகனுக்கு மனநல பாதிப்பா?
மன நலம் பாதிக்கப்பட்டதால் பிரகாஷை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அவர்களிடம் போதிய அளவு பணம் இல்லாததால் பிரகாஷை அரசு மருத்துவமனையில் சேர்க்க முயன்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் பிராகாஷிற்கு மருந்து வாங்குவதற்காக தாய் சாந்தி மருத்துவமனைக்கு சென்று இருந்த நிலையில், தந்தை மற்றும் அக்காவை பிரகாஷ் கொலை செய்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாய் சாந்தி வீட்டில் இல்லாததால் உயிர் பிழைத்துள்ளார் , இந்த இரட்டை கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? சொத்து பிரச்சனை ஏதாவது உள்ளதா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை மற்றும் அக்காவின் கழுத்தை மகனே அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.