செப்.13-ம் தேதி 12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு - காத்திருக்கும் மாணவர்கள்
தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், தேர்வின் முடிவுகள் வரும் 13ம் தேதி வெளியிட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.தேர்வு நடத்தப்படாமல் மாணவர்களுக்கு வழங்கிய மதிப்பெண்களின் சிலர் அதிருப்தி அடைந்திருந்தனர்.
இதனால் விருப்பமுள்ள மாணவர்கள் துணைத்தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் துணைத்தேர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது.
தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து, முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசுத் தேர்வுகள் இயக்குநர் துணைத்தேர்வு முடிவுகள் குறித்து, 2021 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக 13.09.2021 (திங்கள்கிழமை) காலை 11.00 மணி முதல் இணையத்தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். துணைத்தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களும் செப்டம்பர் 13ம் தேதி அன்றே தங்களது முடிவை அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் துணைத்தேர்வு முடிவுகளை அரசின் அதிகாரபூர்வ இணையதளமான www.dge.tn.gov.in ல் அறிந்து கொள்ளலாம்.
துணைத் தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செப்டம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் உரிய கட்டணம் செலுத்திப் பதிவு செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.