அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது அதிமுக அரசுதான் - அமைச்சர் செந்தில் பாலாஜி
அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தாக வெளியான தகவலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
அதானி வழக்கு
சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக அதானி குழுமம் மீது அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அதானியை சந்தித்ததாகவும், அதானி நிறுவனத்துடன் அதிக விலைக்கு சூரிய ஒளி ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டின.
செந்தில் பாலாஜி
இந்நிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொழிலதிபர் அதானியை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தது போலவும், அதிக விலைகொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பதுபோலவும் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலை வெளியிட்டு வருவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம்
ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதம் செலுத்த வேண்டும்” என்ற ஒன்றிய அரசின் கட்டாய விதி உள்ளது.
இதன், அடிப்படையில் 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI)வுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல.
இன்னும் சொல்லப் போனால், ஒன்றிய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பெறுவது குறித்த கட்டாய விதி எதுவும் இல்லாத காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் அதானி லிமிடெட் நிறுவனம், தங்களுக்கு சொந்தமான ஐந்து நிறுவனங்கள் மூலமாக, 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்கான எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தத்தில் 04/07/2015 அன்று, கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 என முடிவு செய்து, 31/03/2016க்கு முன் உற்பத்தி ஆலைகள் இயக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது. அதானி நிறுவனம் 31/03/2016க்கு முன் பல்வேறு தேதிகளில் 313 மெகாவாட் மின்சாரத்தை இயக்கி, ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 உரிமை கோரியது.. 31/03/2016 தேதிக்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து, 18/09/2016 அன்று 288 மெகாவாட் மின்சாரம் வழங்கியது.
மின்கட்டண உயர்வு
அதானி நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை ரூ.7.01க்கு நீண்ட கால அடிப்படையில் பெற 2014ல் ஒப்பந்தமிட்ட அரசை விட்டுவிட்டு, 2021ம் ஆண்டு பொறுப்பேற்ற உடனே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அதானி நிறுவனத்துக்கு எதிரான வழக்கை திறம்பட நடத்தியை திமுக அரசை- மின்சார வாரியத்திற்கு சாதகமாக, அதாவது ரூ.5.10க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்னும் அளவிற்கு சாதகமான ஆணையைப் பெற்ற அரசை குறை சொல்வது எந்த வகையிலும் நியாயமாகாது.
மின்கட்டண உயர்வு மூலம் 31,500 கோடி ரூபாய் என்று ஒரு அபத்தமான குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள். எப்போது மின் கட்டண உயர்வை ஏற்படுத்தினாலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவது திமுக அரசு மட்டுமே.
அதிமுக- பாஜக கூட்டணி
இலட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு மின் மானியமாக வழங்க ஆணை வெளியிட்டு, வீடுகளுக்கான மின்கட்டண உயர்வே இல்லாமல் பார்த்துக்கொண்டவர் எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் மட்டுமே என்பதை இந்தநேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டதையும் மறைத்து- உச்சநீதிமன்ற உத்தரவையும் அறியாதவர்கள் போல் அதிமுக அரசின் மின்கொள்முதலை திமுக அரசின் மின் கொள்முதல் முடிவு போல் சித்தரிக்க துடிக்கும் அரைகுறை அரசியல்வாதிகளுக்கு அதானி நிறுவனத்தையோ- அதிமுகவையோ விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. அதற்குள்தான் அதிமுக- பா.ஜ.க. கூட்டணி திரைமறைவில் ஒளிந்து கிடக்கிறது.
"தொழிலதிபர் அதானியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சந்திக்கவும் இல்லை. அந்தத் தனியார் நிறுவனத்துடன் தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தம் போடவும் இல்லை. அதிமுக ஆட்சி ஒப்பந்தத்தில் கூறிய யூனிட்டுக்கு 7.01 சூரிய ஒளி மின்சார கட்டணத்தை எதிர்த்து திமுக ஆட்சியில் தொடர்ந்த வழக்கு…
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 6, 2024
நல்லாட்சிக்கு இலக்கணமாகச் செயல்பட்டு வருவதை பொறுத்துக்கொள்ள இயலாமல், “அவரைச் சந்தித்தார்”, “இந்தத் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார்” என்றெல்லாம் பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.