செந்தில் பாலாஜியின் வழக்கு - நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கில் விசாரணை முடித்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேல்முறையீடு மனு
சட்டவிரோத பண பரிவர்த்தனை காரணமாக கைது செய்யப்பட்ட இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவரது மனைவி மேகலா மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என தீர்ப்பளித்த நிலையில், இதற்கு எதிராக மேகலா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படவேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
அமலாக்க துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார் கைத்திற்கான காரணத்தை ஏற்கனவே அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி இருப்பதால் அவரிடம் சரியான முறையில் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அவர் வாதிட்டார்.
அதே நேரத்தில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது அமலாக்கத்துறையின் உரிமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களும் இன்று உச்சநீதிமன்றத்தில் நிறைவு பெற்றுள்ளது.
இருதரப்பு வாதங்களும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்ததோடு, அமலாக்கத்துறை சார்பில் முன்வைக்கப்பட்ட இடைக்கால தீர்ப்பிற்கான கோரிக்கையும் தள்ளி வைத்தனர்.