தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் என்று முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
முதல்வர் விஜய் பேச்சு
இன்று கரூருக்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார்.
குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்து பேசிய போது, "கரூர் போலீசே எங்களை கூட்டிட்டு வந்த அந்த நாடகத்தை முழுசா நம்பிட்டேன். இதுக்கெல்லாம் யார் காரணம்? இதெல்லாம் யார் சொல்லி செஞ்சது?

குடும்ப உறவுகள இழந்து அந்த வலியோடு இருக்க என்ன ஏளனமா பேசுவீங்களா.. என் மேல பழிய தூக்கி போடுவீங்களா.. இப்படி நடந்திருச்சேனு அந்த வேதனையோடு, வீட்டில இருந்த என்ன, ஓடி ஒளிஞ்சிட்டானு சொல்றீங்களா" என பேசினார்.
முதல்வரின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் எதிர்வினை எழுந்துள்ளது.
தனி விமானம் பிடித்து ஓடியது யார்?
இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?

மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள்.
அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும். அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என குறிப்பிட்டுள்ளார்.