செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்பு சலுகை இல்லை - அமைச்சர் ரகுபதி..!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சிறப்பு வசதிகள் இல்லை
புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு எந்த சிறப்பு வசதியும் வழங்கவில்லை.
முதல் வகுப்பு கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் என்றோ, திமுகவை சேர்த்தவர் என்றோ எந்த கூடுதல் சலுகையும் வழங்கப்படவில்லை செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
பின்னர் பேசிய அவர், கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உத்தரவு பிறப்பிக்கவில்லை
மேகதாது அணை விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பார். தமிழக அரசின் நிலைப்பாடு மேகதாது அணை அமைக்கக்கூடாது என்பதே ஆகும்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை அகற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, தற்போதைய நடைமுறையே தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி கூறிவிட்டார் என்று அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.