சிபிஐ சம்மன்: 17ம் தேதி நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் வருகிற 17ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.
கரூரில் தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் மரணமடைந்த விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக தவெக வினர் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், விஜய்க்கு இருமுறை சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்ததாகவும், அவர் ஆஜராகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின.
இன்று தனக்கு சம்மன் வந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார்.
அதில், சிபிஐ சம்மன் தொடர்பில் முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் வந்தன, 17ம் தேதி நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சம்மன் வந்துள்ளது, இதன் அடிப்படையில் நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
