அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உள்ளது; நீதிபதி - விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அதனையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உயர் நீதி மன்றத்தில் ஆட்கொனர்வு மனுவை தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது என்றும் அவர் பரிபூரணமாக குணமடைந்த பிறகு அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.
தற்போது செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து மாற்றப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மதியம் 2 மணிக்கு விசாரணை . இதில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதிட்டார். அதில் "அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது. அப்படி இருக்கையில் எப்படி கைது செய்ய முடியும்? ஒருவரிடம் விசாரணை நடத்தி அதன் மூலம் வாக்குமூலத்தைப் பெற்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் பயன்படுத்த முடியும்.
அமலாக்கத்துறையால் நேரடியாகக் கைது செய்து விசாரணை நடத்த முடியுமா? சுங்கத்துறை அதிகாரிகளால் ஒருவரைக் கைது செய்ய முடியுமா? காவல்துறையினர் தான் கைது செய்ய முடியும். இது அமலாக்கத்துறையினருக்கும் பொருந்தும். காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. சட்ட விதிகளின்படிதான் கைது செய்யப்பட்டுள்ளோமா என்பதைக் கருத்தில் கொள்ளவும், அதனை உறுதிப்படுத்தவும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உரிமை உண்டு” என வாதிட்டார்.
மேலும், ஆவணங்களைக் கையகப்படுத்துவது, அதனை முடக்குவது தான் அமலாக்கத்துறைக்கு உள்ள அதிகாரம்” எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி போபண்ணா, “அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உள்ளது” எனத் தெரிவித்தார். அதற்கு கபில் சிபல், “அமலாக்கத்துறையினர் நீதிமன்ற விசாரணைக்குத் தான் அனுப்ப முடியும் எனும்போது எவ்வாறு விசாரணை நடத்த முடியும்” எனத் தெரிவித்தார்.
அதற்கு, “அமலாக்கத்துறை நேரடியாகக் கைது செய்ய முடியாதா” என செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். இவ்வாறு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கானது நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.