செந்தில் பாலாஜியை ED கைது செய்ய முடியும் என உச்சநீதிமன்றம் கருத்து - வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி தனது வாதத்தை முன் வைத்திருந்தார்.
இந்த விவகாரத்தை விரைந்து விசாரிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.
மேலும், செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, இவ்வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைப்பதாகவும் அறிவித்தது.
பணம் எங்கிருந்து என்பதை கண்டறிய வேண்டும்
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று 2வது நாளாக உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்றது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகளாக கருதப்பட்டால், இந்திய கிரிமினல் சட்டத்தின் கீழ் அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு இருக்கும், ஆனால், அவ்வாறு இருந்தால் அது PMLA சட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது என செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதத்தை முன்வைத்தார்.
இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், அதிகமான தரவுகளை பெறவே ஒருவரை விசாரணை முகமைகள் செய்கின்றன. சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் பணம் எங்கிருந்து என்பதை கண்டறிய வேண்டும்.
எனவே, ஒருவரை ஒரு விசாரணை அமைப்பு எதற்காக கைது செய்கிறது? அவரிடம் இருந்து மேலும் அதிகமான வழக்கிற்கான ஆதாரங்களை பெற வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு வழக்கு விசாரணைணை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் ஆகஸ்ட் 1ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் போது இரு தரப்பு வாதங்களையும் ஒரு மணி நேரத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.