அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம்; கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிப்பு
அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிப்பு.
தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி
தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு, தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சுமார் 18 மணிநேரம் சோதனை நடத்தி பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தற்போது அவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எ.வ.வேலு, ரகுபதி ஆகியோர் உடல் நலன் குறித்து நேரில் கேட்டறிந்தனர்.
கரூரில் போலீசார் குவிப்பு
இந்தநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த காவல் நிலையங்களில் போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவு.

மேலும், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறித்து டிஐஜி சரவண சுந்தர் ரோந்து பணி மூலம் கண்காணித்து வருகிறார்.