அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம்; மத்திய அரசு கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறது - சீமான் கண்டனம்
மத்திய அரசு கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு, தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சுமார் 18 மணிநேரம் சோதனை நடத்தி பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து அதிகாலை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எ.வ.வேலு, ரகுபதி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதை தொடர்ந்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலன் குறித்து விசாரிக்க முதலமைச்சர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீமான் கண்டனம்
இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது நடவடிக்கை பற்றி கூறுகையில்,

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை. தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற பல வேலைகளை மத்திய அரசு செய்யும். இந்த ஆட்சி சர்வாதிகார ஆட்சி இல்லை. கொடுங்கோல் ஆட்சி என கடுமையாக விமர்சித்து இருந்தார்.
மேலும், தன்னிச்சையாக செயல்படவேண்டிய அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல செயல்படுகின்றன என அமலாக்கத்துறையை விமர்சித்த சீமான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய வாழ்த்துகள் என தெரிவித்தார்.