ஜாமீன் கேட்கும் செந்தில் பாலாஜி..என்ன முடிவெடுக்கும் சிறப்பு நீதிமன்றம்..?
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜி - ED
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட நிலையில், அவர் மீது 3000 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த ஆவணங்கள் பற்றிய தகவலை பெற செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை முதன்மை நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
மீண்டும் நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
நேற்று வரை நீடிக்கப்பட்டிருந்த நீதிமன்ற காவலை அடுத்து அவர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து அவருக்கு வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை அந்த காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இன்று செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னைமுதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.