விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்
தன் பெயரை சொன்னதால் செருப்பு வீசப்பட்டது என எழுந்த குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
விஜய் வீடியோ
கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, 3 நாட்களுக்குப் பின் விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதில் பேசிய அவர், "நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. முதல்வர் பழி வாங்க வேண்டுமென்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ தான் இருப்பேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லை
இதில் பேசிய அவர், "கரூர் துயர சம்பவம் மிக கொடுமையானது, யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அதை அரசியலாக பார்க்க வேண்டாம்.
கூட்டம் நடத்தும்போது, எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என கணித்து அதற்கேற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டியது ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பு.
கரூர் லைட் அவுஸ் கார்னரில் அதிகபட்சம் 7000 பேர் நிற்கலாம், உழவர் சந்தை அருகே அதிகபட்சம் 5000 பேர் கூடலாம். தவெகவினர் 10000 பேர் வருவார்கள் என்று கூற அனுமதி கேட்ட இடங்களை விட வேலுச்சாமிபுரத்தில் ஏராளமானோர் நிற்கலாம். குடிநீர் வழங்குவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட்டம் நடத்திய தவெக தான் செய்திருக்க வேண்டும்.
வேலுச்சாமிபுரத்தில் 1000 செருப்புகள் வீதியில் கிடந்தன, ஆனால் ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லை, இதிலிருந்தே தெரிகிறது, மக்களுக்கு குடிநீரோ, பிஸ்கட் பாக்கெட்டோ வழங்கப்படவில்லை.
விஜய், அன்று மாலை 4 மணிக்கு வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது. மாலை 4 மணிக்கு பிரச்சாரம் மேற்கொண்டிருந்தால் அவர்கள் கூறிய கூட்டம் தான் இருந்திருக்கும். குறித்த நேரத்தில் வந்திருந்தால் பிரச்னையே நடந்திருக்காது.
கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகனத்தை முன்கூட்டியே நிறுத்திவிடலாம் என காவல்துறை எச்சரித்த பின்பும், தவெகவினர் அதை கேட்காமல் வாகனத்தை நகர்த்திச் சென்று அங்கு நிறுத்தியுள்ளனர்.
கூட்டநெரிசல் அதிகமாகும்போது, ஜெனரேட்டர் அறை தடுப்புகளை உடத்து உள்ளே விழத்தொடங்கினர், அப்போதுதான் ஜெனரேட்டர்கள் ஆஃப் செய்யப்பட்டது.
அப்போது கூட சாலை விளக்குகள் ஆஃப் செய்யப்படவில்லை. அவர்கள் கூடுதலாக அமைத்த விளக்குகள் மட்டும் ஆஃப் செய்யப்பட்டது. வீடியோவில் எல்லம் தெளிவாக உள்ளது, எங்கும் மின் விநியோகம் தடைபடவில்லை.
விஜய் கவனத்தை ஈர்க்க..
சம்பவம் நடந்தபோது மருத்துவமனைக்கு அருகே உள்ள எனது அலுவலகத்தில் இருந்தேன். சம்பவ இடத்திற்கு செல்லாமல், நானும் டிக்கெட் போட்டு சென்னைக்கு செல்ல வேண்டுமா?
அரசு தன் கடமையை சரியாக செய்தது, ஆனால் அந்த அரசியல் கட்சி தனது கடமையை சரிவர செய்ய வில்லை. விஜய் கூட்டத்திற்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம்.
என்னைப் பற்றி பேசத் தொடங்கியதும் செருப்பு வீசப்பட்டது என்பது தவறானது. செருப்பு வீசப்பட்ட நேரத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே தண்ணீர் கேட்டு மக்கள் குரல் கொடுத்தனர். தொடர்ந்து குரல் எழுப்பியும் தண்ணீர் கிடைக்காததால் கவனத்தை ஈர்க்க சிலர் கையில் கிடைத்ததை வீசி எறிந்தனர்.
வாகனத்தின் முன் இருக்கையில் விஜய் அமர்ந்திருந்தால் நெரிசல் ஏற்பட்டிருக்காது.வழக்கமாக அரசியல் தலைவர்கள் செய்வதற்கு நேர் மாறாக, விஜய் வாகனத்தின் உள்ளே சென்று, விளக்குகளை அணைத்துவிட்டார். அவரைக் காண வேண்டும் என்பதற்காகவே கூட்டம் அவரை பின் தொடர்ந்தது.
தவெக சார்பில் அவர்களே 5 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துள்ளனர். திமுக ஆம்புலன்ஸ் ஒன்றுகூட தவெக கூட்டம் நடந்த இடத்தில் இல்லை. அனைத்து நேரலையிலும் இதை காணலாம். துயரச் சம்பவத்துக்குப்பின் ஆம்புலன்ஸ் போதவில்லை என்ற தகவல் வந்தபின்தான், அவசரம் கருதி எங்கள் வாகனத்தை அனுப்பினோம்.
எந்த நேரத்தில் என்ன நடந்ததென்றே தெரியாமல், செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல், அதை சரிசெய்யவும் முயற்சி எடுக்காமல் யார் மீதாவது பழி போட வேண்டுமென அரசை நோக்கி சிலர் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிடுகின்றனர்.
சமீபத்தில் கூட கூட்டத்துக்குள் யாரோ ஒருவர் இன்னொருவரை கத்தியால் குத்திவிட்டார் என சமூகவலைதளத்தில் சிலர் சொல்கிறார்கள். அது உண்மையெனில், அந்த நபருக்கு எங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற அடிப்படை தகவலையாவது சொல்ல சொல்லுங்கள்" என பேசியுள்ளார்.