பிரசாரத்தின் போது ஸ்ரீபிரியாவிடம் காசு கேட்ட நபரால் பரபரப்பு
மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மநீம வேட்பாளர் ஸ்ரீபிரியாவிடம், நோயாளி ஒருவர் காசு கேட்டு வம்பிழுத்ததால் சிறிது நேரம் பரபரப்பானது. மக்கள் நீதி மய்யம் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் ஸ்ரீபிரியா, இதற்காக வாக்கு சேகரிக்கும் முயற்சியில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து வந்தார்.
அப்போது, அங்கே பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட, அதற்கேற்றவாறு நபர் ஒருவர் குத்தாட்டம் போட்டார், கையில் பேண்டேஜ் போட்டபடி அவர் ஆடியதுடன், ஸ்ரீபிரியாவிடம் காசு கொடுக்குமாறு வம்பிழுத்துள்ளார். ஸ்ரீபிரியா எவ்வளவோ எடுத்துக்கூறியும், அவர் அங்கிருந்து செல்ல மறுத்ததால் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர்.
விசாரணையில், தன்னுடைய பெயர் பாண்டியராஜ் என்றும், சிவகங்கையை சேர்ந்தவர் எனவும் கூறியுள்ளார். மேலும் இதய நோயாளியான தான், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது தப்பி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஸ்ரீபிரியாவை பார்த்தவுடன் அவரிடம் செலவுக்கு காசு வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.