பிரச்சாரத்தின்போது திடீரென அடித்துக்கொண்ட அதிமுக மற்றும் திமுகவினரால் பரபரப்பு
கரூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக - அதிமுக இடையே மோதல் . அமைச்சரின் உதவியாளர் ரமேஷ் உட்பட 10க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தாக்கப்பட்டனர்.
இவர்கள் கருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கரூர் நகர பகுதி 25வது வார்டு பகுதியான மாவடியான்கோவில் தெருவில் அதிமுக வேட்பாளரும் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக கூறி அப்பகுதியில் உள்ள திமுகவினர் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வாகனத்தை மறித்துள்ளனர்.
அப்போது, அதிமுக - திமுக இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
திடீரென்று இரு தரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு அடிதடி போட்டுக் கொண்டனர். இதில் அமைச்சரின் உதவியாளர் ரமேஷ் உட்பட அதிமுகவை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.