இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

india person dead tamilnadu
By Jon Mar 02, 2021 07:07 PM GMT
Report

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். 89 வயதாகும் சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியன் வயது முதிர்வு காரணமாக உடல்நிலையில் அவ்வப்போது பாதிப்பு ஏற்படும். நேற்று காலை அவர் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மதுரை உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் 1942 இல் பிறந்தார் தா.பாண்டியன். 1989, 1991, தேர்தலில் வெற்றிபெற்று இரண்டுமுறை மக்களவை உறுப்பினராக தா.பாண்டியன் பதவி வகித்துள்ளார். ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கி 1983 முதல் 2000 வரை மாநில செயலாளராக இருந்தார் தா பாண்டியன்.

2000 ஆம் ஆண்டு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை கலைத்துவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் இணைந்தார். 2005ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மூன்று முறை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியவர் தா.பாண்டியன்.

இளம் வயதிலேயே கட்சியின் தேசியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தா.பாண்டியன் இறுதிவரை பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். கொரோனாவிலிருந்து மீண்ட பாண்டியன் சிறுநீரகத் தொற்று, சிறுநீரக செயலிழப்பு காரணங்களால் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.