நான் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறேன் - Zomato இணை நிறுவனர் கௌரவ் குப்தா

zomato gauravgupta executive
By Irumporai Sep 14, 2021 09:22 AM GMT
Report

ஜொமாட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் கௌரவ் குப்தா தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2015ஆம் ஆண்டு, ஜொமாட்டோ நிறுவனத்தில் இணைந்த கௌரவ் குப்தா, 2018-ஆம் ஆண்டு அதன் தலைமை செயல் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, அதன் இணை நிறுவனராக அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டின், Zomato IPO என்ற ஜொமாட்டோ நிறுவனப் பங்குகளின் விற்பனையின் போது, பங்குதாரர்களுக்கும், ஊடகங்களுக்கும் நிறுவனத்தின் முகமாக கௌரவ் குப்தா செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஜொமாட்டோ நிறுவனம் மளிகைப் பொருள்கள் டெலிவரி, நியூட்ராசிட்டிகல் வர்த்தகம் முதலானவற்றில் இருந்து வெளியேறிய பிறகு, ஜொமாட்டோ இணை நிறுவனர் கௌரவ் குப்தா பணியில் இருந்து விலகியுள்ளார்.

இது குறித்து கௌரவ் குப்தா தனது ட்விட்டர் பதிவில் : நம் முன் இன்னும் பெரிய பயணம் காத்திருக்கிறது. நம்மிடையே நல்ல அணியும், தலைமைப் பண்பும் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் என்பதற்கு நன்றியுடன் இருக்கிறேன் என்று ஜொமாட்டோவின் மற்றொரு இணை நிறுவனர் தீபிந்தர் கோயல் கௌரவ் குப்தாவின் வெளியேற்றம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜொமாட்டோ நிறுவனர்கள் தீபிந்தர் கோயல், கௌரவ் குப்தா ஆகியோருக்கு இடையில் மோதல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

கௌரவ் குப்தா அறிமுகப்படுத்திய மளிகைப் பொருள்கள் டெலிவரி, நியூட்ராசிட்டிகல் என்று அழைக்கப்படும் மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருள் விற்பனை முதலானவை தோல்வியில் முடிவடைந்தன.

வெளிநாடுகளில் ஜொமாட்டோ நிறுவனத்தை விரிவுபடுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளும் பலன் தரவில்லை. தனது பணி விலகல் குறித்து, அலுவலகத்தின் நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பிய மெயிலில், ஜொமாட்டோ நிறுவனத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தற்போது தனது வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவுள்ளதாகக் கூறியுள்ளார் கௌரவ் குப்தா.

ஜொமாட்டோவை முன்னோக்கி நகர்த்த நம்மிடையே நல்ல அணி இருக்கிறது. எனினும் என் பயணத்தில் வேறொரு பாதையைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துவிட்டது. இதனை எழுதும் போது, மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடு இருக்கிறேன். தற்போதைய எனது உணர்வுகளை எந்த வார்த்தையைக் கொண்டும் விவரிக்க முடியாது என அவரது மெயிலில் குறிப்பிட்டுள்ளார் கௌரவ் குப்தா.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, சராசரி இந்தியர்கள் அதிகளவில் ஆரோக்கியமான உணவை உண்கிறார்கள் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, அதற்கென்று பிரத்யேகமான வர்த்தகத்தைத் தொடங்கி, அதன் பிரிவுக்குத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார் கௌரவ் குப்தா. கடந்த ஆண்டு,இந்த வர்த்தகம் ஜொமாட்டோ நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் பயன்படுவதாக இருக்கும் என அவர் பேட்டியளித்திருந்தார்.

எனினும் கடந்த ஜூலை மாதம், ஜொமாட்டோ நிறுவனத்தில் சுமார் 356 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்தது. கடந்த ஆண்டு, சுமார் 99.8 கோடி ரூபாய் இழப்பைவிட பல மடங்காக இந்த ஆண்டு உயர்ந்திருந்தது.