இபிஎஸ் உடன் மோதல்? அப்படி இருக்கத்தான் விரும்புகிறேன் - செங்கோட்டையன் உறுதி
தொண்டனாகவே இருக்க விரும்புவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
உட்கட்சிப் பூசல்?
அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனுக்கும் மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மே 1ம் தேதி நாடு முழுக்க உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் பல இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்படி ஈரோடு ஆசனூரில் நடந்த கொண்டாட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
செங்கோட்டையன் பேச்சு
அப்போது பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரை நான் எப்போதும் சாதாரணத் தொண்டராக இருந்தே பணியாற்ற விரும்புகிறேன்.அதிமுக வெல்ல வேண்டும் என்பது மட்டுமே எனக்கு நோக்கம். அதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு நான் பணியாற்றுகிறேன்.
இந்த இயக்கம் மண்ணில் வளர வேண்டும். இந்த இயக்கத்தில் இருப்போர் ஆட்சியில் அமர வேண்டும் என்பதே எனது விருப்பம். அப்போது தான் மக்களின் கண்ணீர் துடைக்கப்படும். அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.
அதிமுக ஆட்சி அமைந்த உடனேயே தொழிலாளர்கள் நலன் காக்கப்படும். மாநிலத்தில் உள்ள விவசாயிகள் நலன் காக்கப்படும். 2026 சட்டசபைத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து நாம் தேர்தலை எதிர்கொள்கிறோம்.
இந்தத் தேர்தலில் நிச்சயம் நாம் 200+ தொகுதிகளில் வெல்லப் போகிறோம்" என தெரிவித்தார். முன்னதாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.