ஜெயலலிதா வழியில் செங்கோட்டையன்.. அடிக்க பாய்ந்த சேகர்பாபு - சுவாரஸ்ய சட்டசபை பிளாஷ்பேக்

Tamil nadu ADMK DMK Edappadi K. Palaniswami K. A. Sengottaiyan
By Sumathi Apr 07, 2025 09:35 AM GMT
Report

அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் செங்கோட்டையன் மட்டும் தனியாளாக பங்கேற்றது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டையன்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கு பனிப்போர் நிலவுவதாக அரசியல் வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியிலும் சென்னையிலும் செங்கோட்டையன் சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

sengottaiyan

இப்படியான சூழலில்தான் சட்டப்பேரவையில் தனி ஆவர்த்தனம் நடத்தியிருக்கிறார் செங்கோட்டையன். எம்ஜிஆர், ஜெயலலிதா என தங்களை வளர்த்த தலைவர்களின் புகைப்படங்களை எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிகழ்வில் பயன்படுத்தவில்லை என்றுதான் முதன்முதலாக செங்கோட்டையன் போர்க்குரல் எழுப்பினார்.

தற்போது ஜெயலலிதா வழியில் சட்டப்பேரவையில் சோலோ பெர்பார்மன்ஸ் கொடுத்துள்ளார். செங்கோட்டையன் தனியாளாக பேசியது பற்றிய கேள்விக்கு, எவ்வளவு பிரச்னை நடந்திருக்கு இதைப் பற்றித்தான் கேப்பீர்களா? என காட்டமாக பதிலளித்துள்ளார்.

பனிப்போர் உச்சம்? 

ஆனால், கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் ஜெயலலிதா தனியாளாக சட்டப்பேரவையில் பேசியதை அதிமுகவினர் இன்றளவும் பெருமிதமாக கூறி வருகின்றனர். அந்த சம்பவத்திற்கும் இன்றைய சம்பவத்திற்கும் ஒரே காரணம் டாஸ்மாக். கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியின் முதல் கூட்டத்தொடரே அமளிதுமளியானது.

admk

2006 மே 26 அன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்தது. அதில் ராதாபுரம் தொகுதியின் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், இப்போதைய சபாநாயகருமான அப்பாவு, மிடாஸ் நிறுவனம் தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்தார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பாவுவிற்கு திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஆதரவாக பேசினர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பானது.

அதிமுகவைச் சேர்ந்த தி.நகர் எம்.எல்.ஏ கலைராஜன் மைக்கை பிடுங்கி காங்கிரஸ் கட்சியின் வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஞானசேகரனை அடித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ பீட்டர் அல்போன்சையும் அதிமுகவினர் தாக்க முயற்சித்தனர். உச்சகட்டமாக முதலமைச்சர் கலைஞரை நோக்கி ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் சேகர்பாபு ஆவேசமாக அடிக்க பாய்ந்தார்.

 அதிமுகவினர் அச்சம்

அப்போது, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் கலைஞரை சுற்றி கைகோர்த்து நின்று சேகர்பாபு அருகில் வரவிடாமல் அரண் அமைத்தனர். அவைக்காவலர்களால் சேகர்பாபு வெளியேற்றப்பட, அதிமுக உறுப்பினர்களை அந்தக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.

சட்டம் ஒழுங்கை சரிசெய்ய சட்டத்தை கையிலெடுப்பதா? அதிகரிக்கும் திமுக என்கவுண்டர் லிஸ்ட்

சட்டம் ஒழுங்கை சரிசெய்ய சட்டத்தை கையிலெடுப்பதா? அதிகரிக்கும் திமுக என்கவுண்டர் லிஸ்ட்

அன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, ”நாளை சட்டப்பேரவைக்கு நான் செல்கிறேன்” என அறிவித்தார். தமிழ்நாடு அரசியலில் யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு அது. அதனைத் தொடர்ந்து 60 அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் ஒற்றை ஆளாக சட்டபேரவைக்குச் சென்று, முதலமைச்சர் கலைஞர், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் என அத்தனை பேரின் குறுக்கீடுகளுக்கு இடையே பேசி முடித்தார்.

தன்னந்தனியாக ஜெயலலிதா பேசும் புகைப்படம் படுவைரலாகி பேசப்பட்டது. அதனையடுத்த 19 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசியலும் சட்டப்பேரவையும் நிறையவே மாறியிருக்கிறது. அன்றைக்கு கலைஞரை அடிக்கப் பாய்ந்த சேகர்பாபு இன்று திமுக அமைச்சர். அந்த சம்பவத்தின் போது ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் என்ன நிலையில் இருக்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை.

அதிமுக உறுப்பினர் கலைராஜன், காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரனைத் தாக்கினார். இன்று இருவரும் திமுகவில் இருக்கிறார்கள். அப்போது பாமக எம்.எல்.ஏவாக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ அப்பாவுவிற்காக குரல் கொடுத்த வேல்முருகன், இன்று தவாக தலைவராக அப்பாவுவிடம் சண்டையிடுகிறார். இந்நிலையில், ஜெயலலிதா வழியில் தான் நடப்பதாக செங்கோட்டையன் கூறுகிறார். ஆனால் அந்த வழி அதிமுக தொண்டர்களுக்கு நல்லதா என பொறுத்திருந்து பார்ப்போம்..