இபிஎஸ்-ஐ சந்திக்காத மோடி - நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் சந்திப்பு
நிர்மலா சீதாராமனுடன் சீமான் மற்றும் செங்கோட்டையன் சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மலா சீதாராமன் சென்னை வருகை
காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேற்று ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.
இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
செங்கோட்டையன் சந்திப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த மாதம் டெல்லியில் வைத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ள நிலையில், தற்போது மீண்டும் சந்தித்து பேசியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் பாஜக உள்ளது. சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள், டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பிற்கு பின்னர், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து, எடப்பாடி பழனிச்சாமியிடம், "தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா, பதிவிட்டிருந்தால் அது அவரது விருப்பம், தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி பற்றி அறிவிக்க முடியும்" என தெரிவித்திருந்தார்.
2021 தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்தததால், அதிமுக கூட்டணியை முறித்து கொண்டது.
இதனையடுத்து, அதிமுக பாஜக இடையே சுமூக கூட்டணி அமைய, தமிழக பாஜக தலைமை பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாஜகவின் 15 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசித்து வருகிறார்.
பாம்பன் பாலம் திறப்பிற்கு தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் ஒதுக்காத நிலையில், செங்கோட்டையனின் நிர்மலா சீதாராமானுடனான சந்திப்பு அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அப்படி எந்த சந்திப்பு நிகழவில்லை என சீமான் விளக்கமளித்துள்ளார்.