அதிமுகவினர் தவெகவில் இணைவது ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
அதிமுகவினர் தவெகவில் இணைந்துள்ளது ஏன் என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
தவெகவில் இணைந்த அதிமுகவினர்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார்.
அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்ட போது, தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.
இன்று அதிமுகவை சேர்ந்த கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி சம்பத், என்.ஆர்.சிவபதி ஆகிய 4 முன்னாள் அமைச்சர்கள், 6 முன்னாள் எம்எல்ஏக்கள் என 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தவெகவில் இணைந்தனர்.
அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமை என்பது வேறு, இன்று இருக்கின்ற தலைமை வேறு. இன்று இருக்கிற தலைமை கூட்டுத்தலைமையே தவிர தனிப்பட்ட தலைமை அல்ல.

ஆகவே பல்வேறு நண்பர்கள் இன்றைக்கு தவெகவில் தங்களை இணைத்து கொண்டு உள்ளனர். தமிழகத்தில் நல்லாட்சி தரவேண்டும், அதற்காக நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் வந்து இணைகிறார்கள் அது வரவேற்கதக்க ஒன்று" என தெரிவித்தார்.
புதிதாக வந்தவர்களுக்கு பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, "வருபவர்களை அரவணைத்து செல்வோம். அவர்களுக்கு ஏற்ப தலைவர் அவர்களிடம் பேசி பொதுச்செயலாளர் அந்த முடிவுகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். அவருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தார்.
அதிமுகவின் நிலை இனி என்ன ஆகும் என்ற கேள்விக்கு, "அதிமுக நிலை இனி கேள்விக்குறியாகத்தான் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.