திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு ; எத்தனை தொகுதிகள்? செல்வப்பெருந்தகை விளக்கம்
திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர், செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திமுக தரப்பில், டி.ஆர்.பாலு தலைமையிலான திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவும், காங்கிரஸ் தரப்பில் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
எத்தனை தொகுதிகள்?
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது.

எங்களுக்கு என்ன தேவையோ அதனை கேட்டுள்ளோம். அவர்களும் அதனை பரிசீலிப்பதாக சொல்லியுள்ளனர். காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக முதல்வர் கூறியுள்ளார்" என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், " எங்களுக்கு தேவையான தொகுதிகள் மற்றும் விருப்ப பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளோம்.
கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம். ஆட்சியில் பங்கு குறித்தும் திமுக குழுவிடம் பேசியுள்ளோம். இதுகுறித்து இரு நாட்களில் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளது” என்றார்.
2021 தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தற்போது 40 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், கடந்த முறை ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளையே இந்த முறையும் ஒதுக்க முடியும், காங்கிரஸூக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கினால் பிற கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும். கூட்டணியில் புதிதாகவும் சில கட்சிகள் இணைந்துள்ளது என திமுக தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.