வினேஷ் போகத் விவகாரம்; மோடியின் மவுனத்திற்கான காரணம் இது தான் - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

K. Selvaperunthagai
By Karthikraja Aug 12, 2024 05:30 PM GMT
Report

வினேஷ் போகத் விவகாரத்தில் மோடி மவுனமாக உள்ளதாக செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வேண்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

selvaperunthagai

இதன் பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் அவர் பேசியதாவது, "ஒலிம்பிக்கில் உலகில் சிறந்த வீரர்களை வீழ்த்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்தை, சோதனை என்ற பெயரில் எடையை சோதித்து தகுதி நீக்கம் செய்து அநீதியை வழங்கி உள்ளார்கள்.

வினேஷ் போகத்

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஒன்றிய அரசோ, பிரதமர் மோடியோ, ஒன்றிய விளையாட்டு துறை சார்பிலோ யாரும் வாய் திறக்கவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் வாய் திறக்கவில்லை என்றால், பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன், இந்தியாவின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த சமயத்தில், பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்த சமயத்தில் வினேஷ் போகத் போன்ற வீரர்கள் பாஜகவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

selvaperunthagai

இதற்கு பழிவாங்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபடலாமா? என இந்திய மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதைவிட அவமானம் இந்த தேசத்திற்கு நேருமா?, இன்னும் வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார்களே என்ன காரணம்? இந்த செயலை காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஒன்றிய பாஜக அரசிற்கு அவர்களுடைய சித்தாந்தம் மற்றும் அடக்குமுறைதான் முக்கியம், இந்தியா என்ற தேசம் முக்கியம் இல்லை. பாஜக அரசு எதிர்க்கட்சியினரை பழி வாங்குவார்கள். தற்பொழுது எதிர்க்கட்சியினரையும் விட்டுவிட்டு விளையாட்டு துறையில் குரல் எழுப்புபவர்களையும் பழிவாங்குகிறார்கள் என பேசியுள்ளார்.