சசிகலாவுக்கு ஆதரவாக செல்லூர் ராஜு? வைரலான ஓடியோ
சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுவது போன்ற ஓடியோ வெளியாகி தொண்டர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 6 தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகளாக சசிகலாவையும், தினகரனையும் தேர்ந்தெடுத்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டு தற்போது மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டெ அவ்வப்போது அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக தொண்டர் ஒருவரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுவது போன்ற ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, குவைத்திலிருந்து சக்திவேல் ராஜன் என்ற நபரும் செல்லூர் ராஜுவும் பேசுவது போன்ற அந்த ஆடியோவில், சசிகலாவை கட்சியில் சேர்க்கும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அது முறையாக நடைபெறும் வரை பொறுமையாக இருக்குமாறும் செல்லூர் ராஜு கூறுவதுபோல் பதிவாகியுள்ளது.
இந்த ஆடியோ இணையத்தில் வைரலான நிலையில், கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் குழப்பம் ஏற்படுத்துவற்காக யாரோ செய்த சதி என்றும் அது தனது குரலே அல்ல என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தன்னைப் போலவே பேசுவதற்கு யாரோ முயற்சி செய்திருக்கிறார்கள் என்றும் ஆடியோவை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.