மனசாட்சி இல்லாமல் பேசும் திருநாவுக்கரசு - செல்லூர் ராஜு ஆதங்கம்
ஜெயலலிதா விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசு கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அதிமுகவின் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.
திருநாவுக்கரசு பதில்
நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதை தொடர்நது தமிழக அரசியலை களத்தில் ஜெயலலிதா விவகாரம் பேசும் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் அது குறித்து பதிலளித்த தற்போது காங்கிரஸ்ஸில் கட்சியில் இருக்கும் திருநாவுக்கரசு, கலைஞர் முகத்தில் குத்து விடவும் இல்லை, ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்படவும் இல்லை என தெரிவித்திருந்தார்.
செல்லூர் ராஜு பதிலடி
இதற்கு தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் அதிமுக மாநாட்டின் பணிகளில் ஈடுபட்டிருந்த அவரிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது “திருநாவுக்கரசர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் திருச்சி தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுகவின் ஆதரவு வேண்டும் என்பதற்காக மனசாட்சியை அடமானம் வைத்து விட்டு பேசுகிறார் என சாடினார்.
சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட விவகாரத்தில் மனசாட்சிக்கு விரோதமாக பதில் சொல்லியிருக்கிறார் என குறிப்பிட்ட செல்லூர் ராஜு, சட்டசபையில் திமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவுடைய சேலையை பிடித்து இழுத்து தலைமுடியை பிடித்து தாக்கிய காட்சிகள் நடந்தன என்றார்.
திருநாவுக்கரசு அதிமுக தொண்டர்களுக்கும், எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய துரோகத்தை ஏற்படுத்தி விட்டு திமுகவிற்கு விசுவாசமாக இருக்கிறார் என குற்றம்சாட்டி, உண்மையில் அவர் மனசாட்சி பிரகாரம் சொல்லவில்லை என்றும் மனசாட்சியை அடகு வைத்து, வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக தொண்டர்கள் அவருக்கு வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக அதனுடைய தலைவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் அவர் பேசி இருக்கிறார்’’ என்றார் தனது கருத்தை கூறினார்.