உங்கள் வீட்டு பிள்ளையாக, மக்களுக்காக நான் வாழ்ந்து வருகிறேன் - அமைச்சர் செல்லூர் ராஜூ
தனக்கென எந்தவிதமான ஆசாபாசமும் இல்லாமல், உங்கள் வீட்டு பிள்ளையாக மக்களுக்காக நான் வாழ்ந்து வருகிறேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக அதிமுக வேட்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார்.

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள முத்தையா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோச்சடை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், அதிமுக ஆட்சி காலத்தில்தான் ஏழை மக்களின் நலனுக்காக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணி பாதுகாக்கப்பட்டுள்ளது. தனக்கென எந்தவிதமான ஆசாபாசமும் இல்லாமல், உங்கள் வீட்டு பிள்ளையாக மக்களுக்காக நான் வாழ்ந்து வருகிறேன் என்று பேசினார்.