‛பிட்டு பட போஸ்டரும் திமுக தேர்தல் அறிக்கையும்’ -செல்லூர் ராஜூ சர்ச்சை சாம்பிள்!
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை பனகல் சாலையில் உள்ள அவரது அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கருப்பு கொடி மற்றும் திமுக அரசை கண்டிக்கும் பதாகைகளை ஏந்தியபடி 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, பொதுமக்கள் மற்றும் காவல் துறையினருக்கு இடையூறு இல்லாத வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளதாகவும், முதல்வர் தேர்தல் வாக்குறுதியை மறந்திருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள பதவி மோகத்தில் மறந்திருந்தாலும், அவருக்கு நினைவூட்டும் வகையில் எதிர்க்கட்சி கடமையாற்றும் என்பதற்கு உதாரணமாக அதிமுக சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் 2010 ஆம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து போரடிய தலைவர் தான் ஜெயலலிதா. திமுக தேர்தல் அறிக்கையில் இனிக்க இனிக்க கூறிவிட்டு தற்போது மக்களுக்கு கசப்பு மருந்து தந்து வருகிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என்று கூறினார். ஆனால் இன்று மாணவர்களை ஏமாற்றி வருகிறார்.
இதேபோல் பெட்ரோல், டீசல் விலை, எரிவாயு கேஸ் விலை 100 ரூபாய் மானியம் என்று அனைத்து வாக்குறுதிகளையும் கொடுத்துவிட்டு தற்போது மக்களை திமுகவினர் ஏமாற்றி வருகின்றனர் என கூறினார்.
அப்போது திருடா திருடி படத்தில் வரும் ஆபாச திரைப்படம் போஸ்டரை பார்த்து படத்தின் போஸ்டரில் இருந்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை என்று ஒரு சிறுவன் அந்த போஸ்டரை கிழிப்பது போல் திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள எந்த சலுகையும் மக்களுக்கு வரவில்லை என சர்ச்சைக்குரிய வகையில் செல்லூர் ராஜூ கிண்டல் அடித்தார்.
மேலும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும், இது தொடர்பாக வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் என்றும் அவர் கூறினார்.