வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹர்திக் பாண்ட்யா புறக்கணிக்கப்பட்டது ஏன்? - வெளியான அதிர்ச்சி தகவல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஏன் இடம் பெறவில்லை என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டி20 போட்டி பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே இந்த தொடருக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. அதில் தென்னாப்பிரிக்கா தொடரில் காயம் காரணமாக இடம்பெறாத கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் இந்த தொடரில் அதிகப்படியான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் நீண்ட நாட்களாக விளையாடாமல் உள்ள ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது உடற்தகுதியின் மேல் இன்னும் முழுமையான நம்பிக்கை வராததால் தேர்வுக்குழுவால் நிராகரிக்கப்பட்டதாகவும், அவருக்குப் பதிலாக வெங்கடேஷ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அதிக பயிற்சியை மேற்கொள்ளுமாறு தேர்வுக்குழு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பார்ம் இன்றி தவித்து வரும் ஹர்திக் பாண்ட்யா விரைவில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.