“பவர்-பிளே, மிடில், கடைசி என அனைத்து ஓவர்களிலும் அசத்தக்கூடியவர் அஷ்வின்” - தலைமை தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா புகழாரம்

ravichandran ashwin chetan sharma about ashwin
By Swetha Subash Dec 27, 2021 10:20 AM GMT
Report

நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தென்னாப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் தொடரில் இடம்பெறலாம் என்று தகவல்கள் வருகின்றன.

இந்திய அணியின் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றுவித போட்டிகளிலும் முன்னணி வீரராக இருந்து வந்தார்.

2017 ஆம் ஆண்டு காயம் காரணமாக வெளியில் அமர்ந்த இவருக்கு பதிலாக, சகல் மற்றும் குல்தீப் இருவரும் அணியில் இடம் பெற்றனர்.

இருவரும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்ததால், தொடர்ந்து அஸ்வினுக்கும் இடம் கிடைக்காமல் இருந்தது.

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே முதன்மை சுழல்பந்து வீச்சாளராக அஸ்வின் இருந்து வந்தார். ஐபிஎல் போட்டிகளில் தன்னை நிரூபித்து, மீண்டும் டி20 உலக கோப்பைக்கு சென்ற இந்திய அணியில் இடம் பிடித்தார்.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு, மீண்டும் சர்வதேச டி20 போட்டிகளில் இவர் விளையாடினார். இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றாலும் அஸ்வினின் செயல்பாடு தேர்வுக்குழு அதிகாரிகளை ஈர்த்துள்ளது.

ஆகையால் அஸ்வினை ஒருநாள் போட்டிகளிலும் விளையாட வைத்து பார்க்க தேர்வுக்குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக அதன் வட்டார தகவல்கள் வெளிவருகின்றன.

இந்திய தலைமை தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது சமீபத்திய பேட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

'ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இருந்தால், மிடில் ஓவர்களில் மட்டுமல்லாது பவர் -பிளே ஓவர்களிலும் அவரை பயன்படுத்தலாம். இதனால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.

மேலும் அஸ்வினிடம் நல்ல பேட்டிங் டெக்னிக் இருக்கிறது. அஸ்வினுக்கு பலவீனம் என்று எதுவும் இல்லை. எத்தகைய சூழலிலும் பந்துவீச கொடுத்தால், அவர் அதனை சிறப்பாக செய்வார்.

பவர்-பிளே ஓவர், மிடில் ஓவர்கள் மற்றும் கடைசி ஓவர் என மூன்று இடங்களிலும் நன்றாக பந்து வீசக்கூடியவர்.' என்று குறிப்பிட்டார்.

சேத்தன் ஷர்மா பேசிய விதத்தை பார்க்கையில், தென்னாபிரிக்கா சென்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கின்றன.

அதில் அஸ்வின் இடம்பெறலாம் என தெரிகிறது. முதல் கட்டமாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் அஸ்வின் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.