ஆசிரியர் தேர்வு வாரியத்தை இழுத்து மூடுங்கள் - ஆவேசமான ராமதாஸ்
ஆசிரியர்களையே தேர்ந்தெடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியத்தை இழுத்து மூடுங்கள் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆசிரியர் தேர்வு
2023ம் ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அவர்களை தேர்ந்தெடுக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முடிவடைந்தது. ஆனால், இன்னும் அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அதன் பின் ஓராண்டாகியும் இன்று வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படவில்லை.
2022-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இன்று வரை 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்று வெளிவந்துள்ளனர். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் அவர்கள் ஆசிரியர் பணிக்கான தகுதியை பெற முடியவில்லை.
ராமதாஸ்
அதனால் தனியார் பள்ளிகளில் கூட அவர்களால் பணிக்கு சேர முடியவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால் அந்த வாரியம் எதற்காக இருக்க வேண்டும். அதை மூடி விடலாமே?
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மீது அரசுக்கு கொஞ்சமாவது அக்கறை இருந்தால் தேர்வு நடத்தப்பட்ட ஆசிரியர் பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.