யார் மனுவை முதலில் பெறுவது? ஒரே சமயத்தில் வந்த சேகர்பாபு-ஜெயக்குமார்; இரு தரப்பும் வாக்கு வாதம்!
வேட்பு மனுவை தாக்கல் செய்ய திமுக - அதிமுக வேட்பாளர்கள் வந்ததால் இரு தரப்பின் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
வேட்பு மனு தாக்கல்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் காட்சிகள் தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வடசென்னை தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் ஒரே நேரத்தில் வந்தனர்.
திமுக வேட்பாளருடன் அமைச்சர் சேகர்பாபு, அதிமுக வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட இரு தரப்பினரும் வந்திருந்தனர். அப்போது, யார் வேட்பு மனுவை முதலில் பெறுவது என குழப்பம் ஏற்பட்டது.
வாக்கு வாதம்
அ.தி.மு.க வேட்பாளர் தான் முதலில் வந்ததாக ஜெயக்குமார் தேர்தல் அதிகாரியிடம் கூறினார். ஆனால், அதனை மறுத்த சேகர் பாபு தங்கள் மனுவை முதலில் பெற்றுக்கொள்ளுமாறு வலுயுறுத்தினார்.
இதனால், இரு தரப்பினரிடமும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இப்படியே சுமார் 45 நிமிடங்கள் வேட்பு மனு தாக்கல் செய்வது தாமதமான நிலையில், பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் வேட்பு மனு தாக்கல் செய்ய அங்கு வந்தார்.
அதனால், வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகமே மிகவும் பரபரப்பாக மாறியது. முதலில் சுயேட்சை வேட்பாளரிடம் மனுவை வாங்கிய பிறகு டோக்கன் அடிப்படையில் வேட்பு மனுவை பெறுவதாக அலுவலர் கூறினார்.
இதனை தி.மு.கவும் அ.தி.மு.கவும் ஏற்றுக்கொண்டு சமரசத்துக்கு வந்துள்ளன.