உயர் பதவியில் இருப்பவர் பொய் செய்தியை பரப்புவது வருத்தத்துக்குரியது- சேகர் பாபு..!

Smt Nirmala Sitharaman Tamil nadu DMK BJP P. K. Sekar Babu
By Karthick Jan 21, 2024 11:48 AM GMT
Report

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.

 நிர்மலா குற்றச்சாட்டு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது எக்ஸ் தள பக்கத்தில், அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ராமருக்கு 200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை.

தனியாருக்கு சொந்தமான கோயில்களில் இந்நிகழ்ச்சிகள் நடத்துவதையும் போலீஸார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு மிரட்டி வருகின்றனர். தமிழக அரசின் இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என குற்றம் சாட்டியிருந்தார்.

வருத்தத்திற்குரியது

இதற்கு, தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், , சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது! என குறிப்பிட்டுள்ளார்.