திருப்பரங்குன்றத்தில் போராடியது இந்து அமைப்புகளே இல்லை - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
வட மாநிலங்களைப் போல இங்கும் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என அமைச்சர் சேகர் பாபு பேசியுள்ளார்.
திருப்பரங்குன்ற விவகாரம்
திருப்பரங்குன்றத்தில் நேற்று(04.02.2025) இந்து மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே என போராட்டம் நடத்தின.
இந்நிலையில் சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அமைச்சர் சேகர்பாபு
அப்போது பேசிய அவர், "திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாகப் போராட்டம் நடத்தியவர்களை இந்து அமைப்பினர் என்று குறிப்பிட வேண்டாம். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எங்களுடைய கண்ணோட்டத்தைப் பொறுத்தவரையில் முழுக்க முழுக்க பாரதிய ஜனதா கட்சி என்றுதான் குற்றம் சாட்ட விரும்புகிறேன்.
திமுக ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். அந்த பகுதியில் உள்ள இஸ்லாமியர் மற்றும் இந்துக்கள் வழங்கிய பேட்டிகளில் இரு மதத்தினரும் அண்ணன் தம்பிகளாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்குள் எந்த பிரிவினையும் இல்லை. இந்த பகுதியைச் சாராதவர்கள் இந்த பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள் என கூறியுள்ளார்கள்.
இது தேவையற்ற பிரச்சனை என அந்த பகுதி மக்களே கூறியுள்ளதால், இந்த பிரச்சனையை தேவையற்ற பிரச்சனையாகத் தான் நாங்கள் கருத வேண்டி உள்ளது. திருப்பரங்குன்றம் திருக்கோவிலைப் பொறுத்தவரையில் நேற்றைக்கு அங்குப் பெரிய கூட்டத்தைக் கூட்டி பிரிவினைவாதத்தை ஏற்படுத்த நினைத்தார்கள். வட மாநிலங்களில் வேண்டும் என்றால் இதற்கான சாத்திய கூறுகள் அமையக்கூடும்.
அரசியல் லாபம்
தமிழக பாஜக தலைவர்களுக்குச் சொல்லிக் கொள்வது என்னவென்றால், முதல்வர் மு.க. ஸ்டாலின் எங்களை அடக்க வாசிக்கச் சொல்லி இருக்கிறார். வட மாநிலங்களைப் போல இங்கும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். எங்குக் கலவரங்கள் ஏற்பட்டாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தயாராக உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
திருப்பரங்குன்றம் மலையைப் பொறுத்தவரை 1920ஆம் ஆண்டு மதுரை சார்பு நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதன் பிறகு 1930ஆம் ஆண்டு லண்டன் பிரிதீவ் கவுன்சில் ஒரு உத்தரவை வழங்கி உள்ளது. அதனைத் தொடர்ந்து 1958 முதல் 2021 வரை பல்வேறு கட்டங்களில் பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றங்கள் வழங்கி உள்ளன. தற்போது 2 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் வரும் தீர்ப்பைப் பொறுத்து அரசு செயல்படும்.
இஸ்லாமியர்களும் இந்துக்களும் மாமன் மைத்துனர்களாக, சகோதரத்துவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை அந்நியப்படுத்தி தமிழ்நாட்டில் அரசியல் லாபம் அடைய பாஜக முயற்சிக்கிறது. முதலமைச்சர் அனுமதியுடன், துறையின் அமைச்சர் என்ற வகையில் கூடிய விரைவில் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல உள்ளேன்" என பேசினார்.