உப்பு சப்பில்லாத சனாதனத்தை குறித்து அண்ணாமலை பேச இது தான் காரணம்...சேகர் பாபு!!
தமிழகத்தில் தங்களது கட்சியை தக்கவைத்து கொள்வதற்காக என்ன செய்வது என்று புரியாமல் தமிழக பாஜகவினர் உள்ளதாக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சேகர் பாபு செய்தியாளர்கள் சந்திப்பு
அடுத்த மாதம் 27 ஆம் தேதி சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, அக்கோவிலில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆய்வினை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகமவிதிப்படி நீண்ட நாட்களில் நிலுவையில் உள்ள திருக்கோவில்கள் மற்றும் 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற திருக்கோவில்கள் ஆகியவற்றிற்கு குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என்று முதல்வரின் உத்தரவுவின் பேரில் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டு, இக்கோவிலில் அடுத்து மாதம் 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது என தகவல் அளித்தார்.
உப்பு சப்பு இல்லாத சனாதனம்
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் திமுக ஆட்சிக்கு பிறகு தான் விரைவுபடுத்தி திருப்பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்த சேகர்பாபு, இந்து அறநிலையத்துறை வரலாற்றில், திருக்கோவில்களின் நிலங்கள் இதுவரை 5213 கோடி அளவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சி மீது குறைசொல்வதற்கு, எந்த பொருளும் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் பாஜக தலைவர் அண்ணாமலை தவறான வரலாறுகளை உளறி வருகிறார் என குற்றம்சாட்டி உடன்கட்டை ஏறுதல் என்பது கற்புகாகதான் என்று அண்ணாமலை குழம்பி போய் கூறி வருகிறார் என கூறி அவரின் பாதயாத்திரை படுதோல்வியை அடைந்துள்ளது என தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜகவை தக்க வைத்துக் கொள்வதற்காக, ஏதாவது ஒரு பிரச்சினை கையில் எடுக்கவேண்டும் என்பதற்காக உப்பு சப்பு இல்லாத சனாதனத்தை கையில் எடுத்துள்ளார் என்றும் குற்றம்சாட்டி, திமுகவை பொருத்தவரை சனாதனத்தை ஏற்றுக் கொண்டவர்களை எதிர்க்கவில்லை என்றும் சனாதனத்தில் உள்ள சில கோட்பாடுகளை தான் எதிர்க்கிறோம் என கூறினார்.
திமுக சமத்துவ ஆட்சி சமத்துவத்தை எப்பொழுதும் வலியுறுத்தி வருகிறோம் என சுட்டிக்காட்டிய சேகர் பாபு, சமத்துவத்தை வலியுறுத்துகின்ற கடமை உறுதி திமுகவிற்கு தான் இருக்கிறது என்றும் இந்து சமயத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, பெரிய மாற்றத்தை தமிழக முதல்வர் உருவாக்கி காட்டியுள்ளார் என தெரிவித்தார்.