வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து வரப்பட்ட சேலைகள் பறிமுதல்
சென்னைக்கு கொண்டுவரப்பட்ட உரிய ஆவணங்கள் இல்லாத சேலைகளை ஜி.எஸ்.டி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் அதற்கான பணிகளில் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.
மேலும் தேர்தல் சமயத்தில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வாக்கு சேகரிப்பதும் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான சேலைகள், காகித பைகள், 'பிளாஷ் லைட்'டுகள் போன்றவற்றை, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை வடக்கு ஜி.எஸ்.டி., அலுவலக பறக்கும் படை சார்பில், சென்னை அண்ணா சாலையில், நடந்த சோதனையிலேயே நேற்று கைப்பற்றப்பட்டன. இவை, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்படுகிறதா என, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.