ஒரே தடுப்பூசிக்கு மூன்று வெவ்வேறு விலைகளை நிர்ணயம் செய்தது எப்படி?:பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகளை 3 வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்தது எப்படி என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
ஒரே தடுப்பூசிக்கு 3 விலை நிர்ணயிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது எப்படி என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஆண்டு கொரோனாவால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மத்திய அரசு பாடம் கற்காதது ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சீரம் நிறுவனம் கோவிஷீல்டு மருந்தை 3 வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்வதை சுட்டிக் காட்டியுள்ள அவர், ஒரு மருந்தை 3 வெவ்வேறு விலைகளில் எப்படி விற்பனை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சீரம் நிறுவனத்தின் இந்த முடிவால் கொரோனா தடுப்பூசிக்காக மக்கள் அதிக தொகையை செலவிட வேண்டி இருக்கும் என்றும் மாநில அரசுகளுக்கும் பொருளாதார சுமை அதிகரிக்கும் என்றும் சோனியா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவமனைகளில் படுக்கையில்லை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது, மருத்துவர்களின் இருப்பு குறைந்து வருவதாக வேதனை தெரிவித்த சோனியா காந்தி, மத்திய அரசு உணர்வுப்பூர்வமற்ற கொள்கைகளை தொடர்ந்து பிடித்துக் கொண்டு இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.