கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை அனுமதிக்க கூடாது - தமிழக அரசுக்கு சீமான் அறிக்கை
கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என சீமான் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“மக்கள் நலத்தையும், மண்ணின் வளத்தையும் நாசப்படுத்தக் கூடிய கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கிய காலம்தொட்டே நாம் தமிழர் கட்சி அதனை கடுமையாக எதிர்த்து வருவதுடன்,
அணு உலை கழிவுகளை என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியையும் எழுப்பி வந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோதும், கடந்த 2021-ஆம் ஆண்டு
புதிய அணுக்கழிவு மையம் அமைக்க இந்திய அணுவாற்றல் ஒழுங்கு முறை ஆணையம்’ அனுமதி வழங்கியபோதும் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்ததுடன், தமிழ்நாடு முழுவதும் தொடர்ப் போராட்டங்களையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்தது.
ஆனால் மக்கள் எதிர்ப்பினை துளியும் பொருட்படுத்தாது, எதேச் சதிகார போக்குடன் கூடங்குளத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைக்கான தற்காலிக அணுக்கழிவு மையத்தை அமைக்க அனுமதித்தது மத்திய அரசு.
எதிர்காலத்தில் கூடங்குளத்தையே நிரந்தர அணுக்கழிவு மையமாக மாற்றி இந்தியாவில் உள்ள அனைத்து அணுவுலைகளில் வெளியாகும் அணுக்கழிவுகளையும் கூடங்குளத்தில் கொண்டுவந்து கொட்டும் பேராபத்தும் ஏற்படக்கூடும்.
அணுக்கழிவுகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டுமென்ற அக்கறை இருக்குமாயின், அதனை பாதுகாப்பு மிக்க பகுதியான டெல்லியில்,
அதிலும் குறிப்பாக 24 மணி நேரமும் அதி உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியான நாடாளுமன்ற வளாகத்திற்குள் புதைத்து வைப்பதுதான் நாட்டு மக்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கான மிகச் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.
ஆகவே, கூடங்குளத்தில் அடுத்தடுத்து அணுக்கழிவு மையம் அமைக்கின்ற முயற்சியினை உடனடியாகக் கைவிட வேண்டும்.
மேலும் கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பது குறித்து விவாதிக்க விரைவில் தமிழகம் வரவுள்ள இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் புவன் சந்திரபதாவிடம்
தமிழர்களின் ஒருமித்த கருத்தான கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான எதிர்ப்பினை அழுத்தம் திருத்தமாக தமிழ்நாடு அரசு பதிவு செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி, கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கிட கூடாதெனவும் தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன்.
அதையும் மீறி அணுக்கழிவு மையம் அமைக்கும் முயற்சி தொடருமேயானால், மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்க நேரிடும்.