வாஷிங் மெஷின் எப்படி கொடுப்பீர்கள்?- கேள்வி எழுப்பிய சீமான்
தமிழகத்தின் கடன் ரூ.6 லட்சத்திற்கு மேல் இருக்கும்போது எப்படி வாஷிங் மெஷின் கொடுப்பீர்கள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தேர்தல் வரைவு திட்டம் வெளியிடாததற்கு காரணம் காசு இல்லை. உண்மையிலேயே அதுதான் காரணம். இந்த முறை திடீரென தேர்தல் வந்ததால் திட்டமிடுதல் இல்லை. நாளை வெளியிடப்படும். பணம் இருக்கிறவர்தான் அரசியல் செய்ய முடியும் என்ற கோட்பாட்டை ஒழிக்கவில்லை என்றால் முதலாளிகளின் லாபத்தை நோக்கிய அமைப்பாக மாறிவிடும். மனம் உள்ளவனும் வெல்லலாம். இல்லையென்றால் கேடுகெட்ட பணநாயகம் தான் வெல்லும். ஜனநாயகம் வெல்லாது.
என்னிடம் பணம் இல்லை. கமலுக்கு பிக்பாஸ் போதும். ஹெலிஹாப்டரில் போகலாம். அனல்மின் நிலையம், அதானி துறைமுகம் உள்ளிட்ட பிரச்னைகள்தான், நான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட காரணம். உலக தரத்திலான கல்வி, மருத்துவம், குடிநீரை நான் உறுதியாக தருவேன். இதுதான் எங்கள் இலவசம் குறித்த வாக்குறுதி.
வாஷிங் மெஷின் கொடுக்க ரூ.15 ஆயிரம் செலவாகும். 2 கோடிக்கு மேலான குடும்ப அட்டைக்கு வாஷிங் மெஷின் கொடுக்க எங்கிருந்து பணம் பெறுவீர்கள் என சொல்ல வேண்டும். ரூ.6 லட்சம் கோடி கடன் இருக்கும்போது எப்படி வாஷிங் மெஷின் கொடுப்பீர்கள்? அதிமுக, திமுக.,விற்கு மாற்றாக நாங்கள் 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
தமிழ் குடிகளே என ஸ்டாலின் கூறுகிறார். அவர் திராவிடர்களே என கூற முடியுமா. எல்லாம் ஏமாற்று வேலை. அந்த கருத்தியல் வேறுபாடை நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.