அதிமுகவை சசிகலா கைப்பற்ற இபிஎஸ் விடமாட்டார் - சீமான் கருத்து

Seeman EPS AIADMK V. K. Sasikala
By Thahir Oct 16, 2021 10:28 AM GMT
Report

அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது அதற்கு இபிஎஸ் விடமாட்டார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா ஜனவரி மாதம் பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையானார்.

இதனையடுத்து அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது.இதையடுத்து பல்வேறு அதிமுக நிர்வாகிகளிடமும் சசிகலா செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

அதில், அதிமுகவை மீட்டெடுப்பதில் தான் ஈடுபடுவேன் எனத் தொடர்ந்து கூறிவந்தார். அப்படி, சசிகலாவிடம் பேசிவந்த அதிமுக நிர்வாகிகளை அக்கட்சித் தலைமை உடனடியாக நீக்கி நடவடிக்கை எடுத்தது.

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளது. எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சி பெறவில்லை.

மேலும், அதிமுகவின் பொன்விழா ஆண்டு நாளை (17ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சசிகலா, இன்று (16ம் தேதி) எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த தன் இல்லத்திலிருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் புறப்பட்டு மெரினா சென்றார்.

மெரினாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களிலும் அவருடைய ஆதரவாளர்கள் சூழ்ந்தனர். சிறை செல்லும் முன்பு 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று சசிகலா சபதம் செய்தார்.

இந்நிலையில், சிறையில் இருந்து விடுதலையாகி வந்தபின் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று முதல் முறையாகச் சென்றார்.அங்கு கண்ணீர் சிந்தியபடி மரியாதை செலுத்தினார்.

அதிமுகவை சசிகலா கைப்பற்ற இபிஎஸ் விடமாட்டார் - சீமான் கருத்து | Seeman V K Sasikala Eps Aiadmk

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிமுகவை சசிகலா கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல,அதற்கு இபிஎஸ் விடமாட்டார் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் சசிகலா வருகையால் அதிமுகவில் தாக்கம் இருக்கும் அது எந்த மாதிரியான தாக்கம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என கருத்து கூறியுள்ளார்.