தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் - சீமான்

Corona Seeman Stalin Black Fungus
By mohanelango May 23, 2021 12:37 PM GMT
Report

இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் மிகத் தீவிரமாக கருப்புபூஞ்சை பாதிப்பு தற்போது தமிழகத்திலும் தென்பட ஆரம்பித்துவிட்டது.

எனவே கருப்புபூஞ்சை நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலில் புதிய உச்சத்தை எட்டி நாட்டிலேயே அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்து வரும் மாநிலமாக தமிழகம் மாறி நிற்கிற வேளையில் தற்போது பரவி வரும் கறுப்புப்பூஞ்சை நோய்ப்பரவல் குறித்த செய்தியானது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாளொன்றுக்கு 36,000 த்திற்கும் மேற்பட்டோரை கொரோனா நோய்த்தொற்று பாதித்து வரும் தற்காலச்சூழலில், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மிக அதிகளவில் உள்ளது.

படுக்கை வசதிகளும், மருந்துகளும், தடுப்பூசிகளும் இல்லாது மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், மக்களைக் காக்கவும் இயலாது தமிழக அரசு திணறி வரும் வேளையில் புதிதாகப் பரவி வேகமெடுத்திருக்கும் கறுப்புப்பூஞ்சை நோய்ப்பரவல் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

வடமாநிலங்களில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் கறுப்புப்பூஞ்சை நோயால் பாதிக்கப்படும் நிலையில், தற்போது சென்னை, மதுரை, விழுப்புரம், சேலம், தஞ்சை, கோவை, திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களும் கறுப்புப்பூஞ்சை நோய்த்தாக்குதலுக்கு ஆட்பட்டு வரும் செய்திகள் பெரும் கவலையைத் தருகின்றன.

கொரோனா தொற்றுப்பரவலைப் போல அல்லாது, கறுப்புப்பூஞ்சை நோயைத் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது பேரவசியமாகிறது.

அலட்சியமாகவிட்டால் உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய கறுப்புப்பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவில் தாமதமின்றிக் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனவும், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கறுப்புப்பூஞ்சை நோயால் பாதிக்கப்படாமலிருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும், மக்களுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்வதற்கான வழிவகைகளையும் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசைக் கோருகிறேன்.

மேலும், கறுப்புப்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி பிரிவுகளை அமைக்கவும், அரசு காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சைப்பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.