திமுக ஆட்சிய வழிநடத்துறதே நான் தான்- சீமான் அதிரடி பேச்சு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவை விதி 110-இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார். ஒவ்வொரு அறிவிப்பும் அவுட் ஆப் கிரவுண்ட் சிக்ஸர்கள் தான் என உடன்பிறப்புகள் துள்ளிக்குதிக்கின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட தொல்லியல் தொடர்பான அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல் தமிழ் பற்றாளர்கள், தமிழ்த்தேசியவாதிகள் என எல்லோரும் வரவேற்பு தெரிவித்தனர்.

அவர் அந்த அறிவிப்பில், “தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்தியத் துணைக் கண்டமெங்கும்; அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித் தடம் பதித்த வெளிநாடுகளிலும்; தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதிகள் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.
அந்த வகையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து அங்கு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும். அதேபோல எகிப்து நாட்டிலுள்ள குசிர்-அல்-காதிம் மற்றும் பெர்னிகா, ஓமான் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில் பழந்தமிழகத்தோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன என்று தெரிவித்தார்.
மேலும், மாமன்னர் ராஜேந்திர சோழன் வெற்றித் தடம் பதித்த தென்கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டுத் தொல்லியல் வல்லுநர்கள் துணையோடு, உரிய அனுமதி பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

தற்போது இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்திக்கொண்டு போகிறது என்ற பெருமை எனக்கு வந்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி என்ன சொல்லியிருக்கிறதோ, என்ன எழுதி அறிக்கை விடுக்கிறதோ அதையெல்லாம் பார்த்துதான் திமுக அரசு செயல்படுத்துகிறது. நான் பேசுவதற்கு எதையும் மிச்சம் வைத்துவிடக்கூடாது என்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதில் எனக்கு மகிழ்ச்சி தான். நான் திமுகவில் தொடர்ந்து இருந்திருந்தால் அமைச்சராக கூட இப்போது ஆகியிருப்பேன். பிரபாகரனை சந்தித்த பிறகுதான் எனக்குள் ஒரு வெளிச்சம் பாய்ந்தது. அதுதான் தமிழ்த் தேசியம் என்றார்.