தமிழக அரசை வலியுறுத்தி கேட்கிறேன்: சீமான் வெளியிட்ட அறிக்கை

seeman
By Fathima Aug 20, 2021 06:27 PM GMT
Report

வைகை அணை தனது முழுக்கொள்ளளவை எட்ட வேண்டுமானால் முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத்தவிர வேறு வழியில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்டப் பகுதிகளிலிருக்கும் வேளாண் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் நிறைவேற்றப்பட்ட உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டப்பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததால் அக்கால்வாய்த்திட்டத்தின் பயன்பாடுகள் விவசாயிகளைச் சென்று சேருவதில்லை எனும் செய்திப் பெருங்கவலையைத் தருகிறது.

வைகை அணை தனது முழுக்கொள்ளளவை எட்ட வேண்டுமானால் முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத்தவிர வேறு வழியில்லை.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினால் மட்டும்தான் வைகை அணைக்குத் தேவையான நீர்த்தேவையை நிறைவுசெய்ய முடியும்.

2012ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தீர்ப்பின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக்கொண்டு, 142 அடியாக நிலைநிறுத்தப்பட்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதே இச்சிக்கலுக்கான நிரந்தரத்தீர்வாக அமையும்.

 

இது தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பாசனத்திற்கும், நீர்த்தேவைக்கும் பயன்படக்கூடியதாக இருக்கும்.

ஆகவே, வைகை அணையின் தண்ணீர்வரத்தை உறுதி செய்யும் வகையில், 152 அடியாக முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி, வைகை அணையின் முழுக்கொள்ளளவு நீர்ப்பிடிப்பை நிறைவு செய்ய வேண்டுமெனவும்,

உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டப்பாசனத்திற்கு உரியப் பருவக்காலத்தில் ஆண்டுதோறும் தண்ணீர் திறக்க ஏதுவாக நிரந்தர அரசாணை வெளியிட வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.