உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி : சீமான்

Seeman
By Irumporai Jun 01, 2022 04:02 PM GMT
Report

 சென்னையை அடுத்த ஆவடியில் பசு மடமும், இறந்த கோயில் யானைகளுக்கு மணிமண்டபமும் கட்டப்படும் என திமுக அரசு அறிவித்ததற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையின் பூர்வீகக்குடிகளின் வாழ்விடங்களை இடித்துத்தகர்த்து மண்ணின் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆவடியில் பசு மடம் கட்டுகிறது.

திராவிட மாடல் அரசு ஆன்மீக திராவிட மாடல் அரசு. சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழர் மூதாதை நந்தன் உள்நுழைந்த தெற்கு நுழைவாயில் அடைக்கப்பட்டு, இன்றும் தீண்டாமைச்சுவர் இருக்கிறதெனக் கூறி, அதனைத் தகர்த்துவிட்டு, நந்தன் பெயரில் மணிமண்டபம் கட்டக்கோருகிறோம்.

இறந்துபோன கோயில் யானைகளுக்குக் கோயில்களில் நினைவு மண்டபங்கள் கட்டுகிறது சமூக நீதி மனுநீதி அரசு. கோவையில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் மட்டும் 79 யானைகள் இறந்துள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

காடுகளிலுள்ள யானைகளின் இருப்புக்கோ, அவை செல்வதற்கான வழித்தடத்துக்கோ வழிவகை செய்யாத திமுக அரசு, கோயில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்டத் துடிப்பது வெட்கக்கேடானது.

அரசின் பெயரில் கடன் வாங்கும் 90,000 கோடி ரூபாயில்தானே, பசுக்களுக்கு மடமும், யானைகளுக்கு நினைவு மண்டபமும் கட்டுகிறீர்கள்? சிறப்பு! சிறப்போ சிறப்பு! உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.