வழக்கின் ஆவணங்களை அளித்தால் மட்டுமே விசாரணைக்கு ஒத்துழைப்பேன்...சீமான் உறுதி
விஜயலக்ஷ்மி அளித்த புகாரின் ஆவணங்களை அளித்தால் மட்டுமே விசாரணைக்கு நேரில் ஆஜராகமுடியும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
சீமான் விஜயலக்ஷ்மி
கடந்த 2011- ஆம் ஆண்டே நடிகை விஜயலக்ஷ்மி இயக்குனரும், தற்போது தீவிர அரசியல் வாதியாக இருந்து வரும் சீமான் தன்னை ஏமாற்றியதாகவும், 7 முறை தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக புகார் அளித்து, அதற்கான விசாரணைகளுக்கு ஒத்துழைத்தார்.
இதில் புகாரின் பேரில், இன்று சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராகவேண்டும் என வளசரவாக்க ஆணையரிடம் இருந்து ஆணை அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இன்று சீமான் நேரில் ஆஜராகாத நிலையில், அவருக்கு பதிலாக அவர் சார்பில் வழக்கறிஞர் விளக்கமளித்தார்.
சீமான் விளக்கம்
இந்நிலையில், தற்போது சீமான் வளசரவாக்கம் காவல் ஆய்வாளருக்கு அளித்துள்ள கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் வேறு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியது உள்ளதால் இன்று விசாரணைக்கு வர இயலவில்லை என சீமான் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் ஆவணங்களை அளித்தாலே விசாரணைக்கு ஒத்துழைக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் முன்னர் பதியப்பட்ட அதே வழக்குகள் தான் பதியப்பட்டுள்ளதா? அல்லது வேறேதேனும் புதிய வழக்குகள் ஏதேனும் பதியப்பட்டுள்ளதா? போன்ற விளக்கங்கள் வேண்டுமென்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.