விஜய் கூட்டணி குறித்து சீமான் சொல்லிய முக்கிய தகவல்
காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா என தவெக விஜய் கேட்ட கேள்விக்கு அறிவுரை வழங்கியதாக நாதக சீமான் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஆயத்தமாகி வருகிறது, 21ம் தேதி திருச்சியில் நடைபெறும் ”மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு” நிகழ்ச்சியில் 234 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இந்நிலையில் இன்று வேட்பாளர்களுடன் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த போது, தவெகவில் இருப்பவர்கள் எல்லாம் சின்ன பசங்க. நாட்டை யார் நாசப்படுத்துவது என்பதில் வேண்டுமானால் திமுக - தவெகவுக்கு இடையே போட்டி இருக்கலாம்.
நாங்கள் வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு 2000, பேருந்துகளில் ஆண்களுக்கு இலவசம் என்பதெல்லாம் எங்கள் அரசியல் அல்ல, அதற்குள் நாங்கள் வரவில்லை என்றார்.
மேலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா என விஜய் கேட்ட போது, காங்கிரஸை சேர்த்துக்கொண்டால் எந்த அரசியல் பேசுவீர்கள் எனக் கேட்டேன்.
கச்சத்தீவு பற்றி பேசுவீர்களா? காவிரி உரிமை பற்றி பேசுவீர்களா? மீத்தேன், ஈத்தேன் பற்றி பேசுவீர்களா? ஜிஎஸ்டி கொண்டு வந்தது யார்? நீட்டை திணித்தது யார்? மாநில உரிமைகளை பறித்தது யார்? இந்தி திணிப்பு யார் செய்தது? பாபர் மசூதியை இடிக்க அனுமதித்தது யார்? அவர்களை கூட்டணியில் வைத்துக்கொண்டு என்ன பேசுவது?" எனக் கேள்வி எழுப்பினாராம்.